லைமையகம் செய்திகள் புகைப்படங்கள் அழைப்பு கட்டுரைகள் கருவூலம் home Home
PIB Delhi Releases Photos Invitations Features Archives
Search உயர்நிலை தேடல்
RSS RSS
Quick Search
home Home
Releases Photos Invitations Features Accreditation Feedback Subscribe Releases Advance Search
                         
  home  Printer friendly Page home  Email this page
 
Special Service

பொதுமக்களை நிதிக்கட்டமைப்பில் இணைத்து மேம்படுத்துதல்

 

திருமிகு, பூர்ணிமா சர்மா*

The National Council for Science & Technology Communication (NCSTC) is mandated to communicate science & technology (S&T) to masses, stimulate scientific and technological temper and coordinate & orchestrate such efforts throughout the country

 

சத்திஸ்கர் மாநிலம், ஜஸ்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய கிராமம் சகோடா. இயற்கையின் வலைப்பின்னல்களில் அழகாக அமைந்துள்ள கிராமம். பசுமை மலைகளால் சூழப்பட்டுள்ளதால், இந்த கிராமத்துக்கு மற்றவர்கள் செல்வது சிரமமாக உள்ளது. மற்றவர்களால் இந்த கிராமத்தை அணுக முடியாததால், இந்தப் பிராந்தியத்தில் உள்ள மற்ற கிராமங்களைச் சேர்ந்த மக்களும் சிரமங்களை அனுபவித்து வருவதில் ஆச்சரியமில்லை.

 

சகோடா கிராமத்தில் வசித்துவருபவர் ரோஷ்ணி பாய். இவரைக் கேட்டால், இந்தக் கிராமத்துக்கு அருகே வங்கிக்கிளை என்பது 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதன் காரணமாக, கிராம மக்களால் வங்கிசேவையைப் பெற முடியவில்லை என்று கூறுகிறார்.

 

நாடு சுதந்திரமடைந்து  69 ஆண்டுகள் முடிவடைந்த பிறகும், ரோஷ்ணி பாய் போன்றவர்களை வங்கி அமைப்புக்குள் கொண்டுவர முடியவில்லை. ரோஷ்ணி பாய் மற்றும் அவரது எதிர்கால சந்ததியினரும் அவ்வாறே வாழ வேண்டியிருந்திருக்கும். ஆனால், புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு வங்கியைச் சேர்ந்த ஊழியர்கள் சிலர், சகோடா கிராமத்துக்கு வந்தனர். சேமிப்பின் அவசியம் குறித்தும், வீட்டிலிருந்தபடியே வங்கிச் சேவைகளைப் பெறுவது குறித்தும் மக்களிடையே எடுத்துரைத்தனர். இது கிராமவாசிகளுக்கு புதிய விடியலாக அமைந்தது. வங்கிக் கணக்கு தொடங்குவதால் ஏற்படும் பயன் குறித்து வங்கி ஊழியர்கள் விளக்கினர். வங்கி சேவைகளைப் பெறுவதற்காக வங்கிகளுக்கு தற்போது செல்ல வேண்டியதில்லை என்றும் எடுத்துக் கூறினர். பெரும்பாலான வங்கி சேவைகளை வீட்டிற்கே வந்து வங்கி பிரதிநிதிகள் வழங்குவார்கள் என்று தெரிவித்தனர். இதையெல்லாம் கேட்டறிந்த மக்கள், வங்கிக்கணக்குகளைத் தொடங்கினர்.

 

தற்போது, ரோஷ்ணி பாய், தனது வங்கிக்கணக்கில் குறிப்பிட்ட அளவு பணத்தை சேமித்து வைத்துள்ளார். இது அதிக அளவில் பணத்தை சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ரோஷ்ணி பாய்க்கும், அவரது கணவருக்கும் ஏற்படுத்தியது. வீட்டுஉபயோகத்திற்காக இருசக்கர வாகனத்தை வாங்க இந்தத் தம்பதியினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக மாதாந்திர சேமிப்புத் தொகையை அதிகரிக்க முடிவுசெய்துள்ளனர். இருசக்கர வாகனத்தை வாங்குவதால், குடும்ப உறுப்பினர்களால் வெளியிடங்களுக்கு எளிதில் சென்று, வருமானத்தை அதிகரிக்கச் செய்ய முடியும். முதல்முறையாக, ரோஷ்ணி பாயும், அவரைப் போன்ற கோடிக்கணக்கான மக்களும்  வங்கிக்கணக்கை வைத்துள்ளனர். இது பிரதம மந்திரியின் மக்கள் நிதித் திட்டத்தின் (Pradhan Mantri Jan-Dhan Yojna - PMJDY) மூலமே சாத்தியமானது. 

 

இந்தத் திட்டத்தின் கீழ், வங்கி அமைப்பிற்கு வெளியே இருந்த பெரும்பாலான மக்கள், தங்களுக்கு என்று வங்கிக்கணக்கை தொடங்கினர். குறுகிய காலத்தில் இந்த அளவுக்கு வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டது சர்வதேச அளவில் சாதனையாகும். இந்தத் திட்டத்தில் பொதுத்துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் தங்களை இணைத்துக் கொண்டன.

 

பிரதம மந்திரியின் மக்கள் நிதித் திட்டத்தை, தலைநகர் டெல்லியில் ஆகஸ்ட் 28, 2014-ல் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். சமூகத்தில் வங்கிக்கே வராமல் உள்ளவர்களை, வங்கி சேவைகளில் இணைக்கும் நோக்கில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வங்கிக்கணக்கையும், வங்கி சேவையையும் வழங்குவதற்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. அதாவது, ஒருங்கிணைந்த நிதிக்கட்டமைப்பில் ஒவ்வொரு குடும்பத்தினரையும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், ஜூன் 29, 2016 வரை, 22.29 கோடிக்கும் அதிகமான புதிய வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டன. இந்தக் கணக்குகளில் ரூ.39,251.57 கோடிக்கும் அதிகமாக பணம் சேமிக்கப்பட்டுள்ளது. 20 லட்சத்துக்கும் அதிகமான கணக்குகளில் சேமிப்பைவிட கூடுதலாக பணம் எடுத்துக் கொள்ளும் வசதி அளிக்கப்பட்டுள்ளது.

 

இந்தத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட மொத்த வங்கிக்கணக்குகளில் 61% அளவுக்கு கிராமப்பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், 52 சதவீதத்துக்கும் அதிகமான வங்கிக்கணக்குகளை பெண்கள் தொடங்கியுள்ளனர்.

 

பிரதமரின் மக்கள் நிதித் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கிக்கணக்குகளில், ஜூன் 29, 2016 வரை, 10.39 கோடி வங்கிக்கணக்குகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், பிரதமரின் மக்கள் நிதித் திட்டத்தின் கீழ், 18.22 கோடி ரூபே அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தில் தொடங்கப்பட்ட வங்கிக்கணக்குகளில் ஒரு பைசா கூட சேமிப்பே இல்லாத கணக்குகளின் எண்ணிக்கை 4-ல் ஒரு பங்காக குறைந்துள்ளது. அதாவது, 25.29%. இதன்படி, தங்களது வங்கிக்கணக்குகளில் நிதிப் பரிமாற்றத்தை பொதுமக்கள் தொடங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

 

பிரதமரின் மக்கள் நிதித் திட்டத்தின் சாதனைகளை உலக சாதனைகளுக்கான கின்னஸ் புத்தகம் அங்கீகரித்துள்ளது. குறிப்பாக, குறுகிய காலத்தில் அதிக அளவிலான வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டதை அங்கீகரித்துள்ளது.

 

இந்தத் திட்டத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், வங்கிச் சேவைகளை கிராமங்களுக்கு வழங்குவதை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், அனைத்து குடியிருப்புக்கும் வழங்குவதில் கவனம் செலுத்தப்பட்டது. ஆரம்பத்தில், நகர்ப்பகுதிகளில் ஏற்கனவே வங்கிகள் இருப்பதாக கருதி, நகர்ப்பகுதிகளை இந்தத் திட்டத்தில் சேர்க்கவில்லை. எனினும், பிரதம மந்திரியின் மக்கள் நிதித் திட்டத்தின் கீழ், நகர்ப்பகுதிகளில் 8.60 கோடி வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டன. இது, நகர்ப்பகுதிகளுக்கும் இந்தத் திட்டம் தேவை என்பதை வெளிப்படுத்துகிறது. இந்தத் திட்டத்தின் மூலம், சாதாரண மனிதனின் சேமிப்புத் திறனை அதிகரிக்கச் செய்யும் வாய்ப்பை வங்கிகள் பெற்றன. இதற்கும் மேலாக, இந்தத் திட்டத்தில் தொடங்கப்பட்ட வங்கிக்கணக்குகள், மொபைல் போனுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், கணக்கு வைத்திருப்பவர்கள், தங்களது வங்கிக்கணக்கின் பரிமாற்றங்கள் குறித்த தகவல்களை நேரடியாகப் பெற முடியும்.

 

வேலைவாய்ப்பை உருவாக்கும் மிகப்பெரிய திட்டம் என்பதையும், பிரதம மந்திரியின் மக்கள் நிதித் திட்டம் உறுதிப்படுத்தியுள்ளது. நிதி கட்டமைப்புக்குள் மக்களை இணைத்து அவர்களை மேம்படுத்துவது, மக்களுக்கு கடன் வழங்குவதற்கான அளவை அதிகரித்து சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்துவது ஆகியவை இந்தத் திட்டத்தின் நோக்கங்கள். வீடுகளுக்கே சென்று வங்கி சேவைகளை வழங்கும் வகையில், 1.26 லட்சத்துக்கும் அதிகமான வங்கி பிரதிநிதிகளை வங்கிகள் தேர்வுசெய்து, அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு மக்களுக்கும் ஏ.டி.எம்.-களைப் போல, வங்கி பிரதிநிதிகள் செயல்படுகின்றனர். மக்களுக்கு, வங்கிக் கணக்குகளை தொடங்குவது, அவர்களுக்கு பணத்தை விநியோகிப்பது, காப்பீட்டை கோருவதற்கு உதவுவது ஆகிய பணிகளை வங்கி பிரதிநிதிகள் மேற்கொள்கின்றனர். குறுகிய காலகட்டத்தில், வங்கி பிரதிநிதிகள் அல்லது வங்கி நண்பர்கள், கிராமப்பகுதிகளில் மிகவும் பிரபலமாகியுள்ளனர்.

 

சாதாரண மக்களை, சமூக பாதுகாப்பு அமைப்புக்குள் கொண்டுவருவதே பிரதம மந்திரியின் மக்கள் நிதித் திட்டத்தின் நோக்கம். நாடு சுதந்திரமடைந்தபிறகு, வளமான நாடு என்பது குறித்து அதிக அளவில் பேசப்படுகிறது. ஆனால், இதனை சாதாரண மக்களுக்கு எவ்வாறு கொண்டுசெல்வது என்பது குறித்து சிந்திக்கப்படவே இல்லை. இதன் காரணமாக, அரசு ஏராளமான கொள்கைகளை வகுத்தபோதிலும், அதன் செயல்பாடு மோசமாக உள்ளது. மத்திய மற்றும் மாநில அரசு ஒதுக்கும் பணம், பொதுமக்களுக்கு சென்று சேராமலேயே உள்ளது அல்லது நடுவழியிலேயே எங்காவது எடுத்துக் கொள்ளப்படுகிறது.

 

முன்பு நடைமுறையில் இருந்த அரசு அமைப்புகளில், ஒவ்வொரு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதி, உரிய பயனாளிகளுக்கு சென்று சேர்ந்ததா, இல்லையா என்பதை கண்டறிவதற்கான வழிமுறை இல்லை. எனவே, ஏற்கனவே நடைமுறையில் இருந்த அமைப்பே, ஊழலுக்கு காரணமாக அமைந்துவிட்டது. முன்னாள் பிரதமர் ஒருவர் வெளியிட்ட அறிக்கையில், மக்கள் நலத் திட்டங்களுக்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதியில், ஒரு ரூபாயில் 16 காசுகள் அளவுக்கே உரிய பயனாளிகளுக்கு சென்று சேர்வதாக தெரிவித்துள்ளார்.

 

அரசியலமைப்பு சட்டத்தில், குறிப்பாக, அரசின் கொள்கைகளை வகுப்பதில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த 41-வது பிரிவில், அரசு தனது பொருளாதார திறன் மற்றும் வளர்ச்சி அடிப்படையில், மக்களுக்கு பணியாற்றும் உரிமை, கல்விஉரிமை ஆகியவற்றை வழங்குவதற்காக சரியான வழிமுறைகளை உருவாக்க வேண்டும். மேலும், வேலைவாய்ப்பின்மை, வயது முதிர்ந்தோர், உடல்நலம் பாதிப்பு மற்றும் உடல்ஊனம் மற்றும் பிற சமயங்களில் நிதியுதவி வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கொள்கை வழிமுறைகளை, அரசுகள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்பதால், மக்களின் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இந்தக் கொள்கைகளுக்கு முந்தைய அரசுகள் உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை.

 

எனவே, திட்டங்களை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளில் அடிப்படை மாற்றம் தேவைப்பட்டது. நாடு சுதந்திரமடைந்து 60 ஆண்டுகளைக் கடந்தபிறகும் கூட, சமூகப் பாதுகாப்பு விவகாரத்தில் அரசின் திட்டங்கள், உரிய பலனைக் கொடுக்கவில்லை. மேலும், கோடிக்கணக்கான மக்கள், வங்கி அமைப்புகளில் பங்கேற்கவில்லை. எனவே, மக்கள் தாங்களாகவே ஈடுபடுத்திக் கொள்வது அவசியம், இதன்மூலமே, தங்களது சொந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்ற நிலை இருந்தது. அதேநேரத்தில், தனியார் துறையினரையும் ஈடுபடுத்த வேண்டியதன் அவசியம் உணரப்பட்டது. எனவே, அடிப்படை மாற்றத்தை செய்ய அரசு முயற்சி மேற்கொண்டது. இந்த மாற்றத்தை, வேகமாக செய்ய வேண்டியிருந்தது.

 

முன்பெல்லாம், ஏழை மக்கள் வங்கிக்கணக்கைத் தொடங்க தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டியிருந்தது. மேலும், பல வழிமுறைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியம் இருந்தது. தற்போது அவர்களுக்கு அடிப்படை அமைப்பிலிருந்தே போதிய பலம் கிடைத்துள்ளது. அடையாள சான்றிதழ் அல்லது சுய சான்றொப்பம் மூலம் வங்கிகளில் கணக்கை தொடங்க முடியும்.

 

மக்கள் நிதி, ஆதார் மற்றும் மொபைல் (JAM) தொழில்நுட்பம் மூலம், வங்கிக்கணக்குகள் இணைக்கப்படுகின்றன. ஏழை மக்களை இடைத்தரகர்களால் ஏமாற்ற முடியாது. முன்னதாக, அரசு அமைப்பில் உள்ள குறைபாடுகளைப் பயன்படுத்தி, சமூகவளர்ச்சி திட்டங்களில் அதிக அளவு நிதியை இடைத்தரகர்கள் சுரண்டிவந்தனர். போலியான பெயரில் பயனாளிகளை உருவாக்கியும், இடைத்தரகர்கள் பயனடைந்து வந்தனர். தற்போது, இடைத்தரகர்களை ஒட்டுமொத்தமாக மக்கள் நிதி, ஆதார் மற்றும் மொபைல் (JAM) தொழில்நுட்பம் நீக்கிவிட்டது. தற்போது, உரிய பயனாளிகளின் வங்கிக் கணக்குக்கு பணம் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படுகிறது. இதுபோன்ற திட்டங்கள் தற்போதைய அவசியத் தேவை. மேலும், நாட்டு மக்களையும், நாட்டையும் மாற்றியமைக்க இதுபோன்ற திட்டங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

 

********

  • (கட்டுரையாசிரியர் பத்திரிகையாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர்.)

இதில் வெளியிடப்பட்ட அனைத்தும் கட்டுரையாசிரியரின் தனிப்பட்ட கருத்துக்கள்.

 
Web Ratana This site is winner of Platinum Icon for 'Outstanding Web Content' Web Ratna Award'09 presented in April 2010

கருத்தும் ஆக்கமும்: கூடுதல் தலைமை இயக்குநர், பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை.
சாஸ்திரி பவன் (தரை தளம்), ஹாடோஸ் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 600 006. Phone 044-28228146/47/48,28256474
Go Top Top

விதிமுறைகள் Copyright கொள்கை தனி கொள்கை Hyperlinking கொள்கை Terms of Use Copyright Policy Privacy Policy Hyperlinking Policy